புதுக்கோட்டை: தமிழகம் முழுவதும் தொல்லியல் ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று இடங்களில் 'ஆசிரியம்' கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள திருமயம் வட்டத்தைச் சேர்ந்த தேவர்மலை, மேலப்பனையூர், செவலூரில் நடத்தப்பட்ட ஆய்வின்போது இக்கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
13ஆம் நூற்றாண்டில் வணிகர்களுக்கும் அவர்கள் கொண்டு செல்லும் பொருள்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காக பல பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டனர் என்றும் இந்த பாதுகாவல் பணி குறித்து அறிவிக்கவே 'ஆசிரியம்' கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டதாகவும் சொல்கிறார் இந்த தொல்லியல் ஆய்வுக்குத் தலைமை ஏற்றுள்ள தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன்.
"புதுக்கோட்டை மாவட்டத்தில் 13ஆம் நூற்றாண்டில் நிலையான, ஒருங்கிணைந்த ஆட்சிமுறை மறையத் தொடங்கிய சூழலில் அதிக நிலம் படைத்தவர்கள் குறுநில மன்னர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் தமது நிர்வாகத்துக்கு உட்பட்ட மக்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் வெளியூரில் இருந்து வணிகம் செய்யும் வணிகர், வணிகப் பொருள்களுக்கும் உரிய பாதுகாப்பாளர்களை நியமித்தனர்," என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிடப்பட்ட 'ஆசிரியம்' கல்வெட்டுகள் திருமயம் வட்டத்தில் தேவர்மலை, மேலப்பனையூர், மலையடிப்பட்டி ஆகிய இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிடும் அவர், அவை அனைத்துமே ஓர் ஊரையோ கோவிலையோ நிர்வகிப்பவர்களைப் பற்றிய விவரங்களைக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். 'ஆசிரியம்' என்ற தமிழ்ச்சொல் சங்கப்பாடல்களிலும் காணப்படுவதால் இதை சமசுகிருத சொல்லாக மட்டுமே கருதக்கூடாது என்றும் மணிகண்டன் கூறியுள்ளார்.
இதற்கிடையே, சென்னிமலையை அடுத்த கொடுமணல் பகுதியில் நடந்த அகழாய்வின்போது 2,300 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்திய படிக்கட்டுடன் கூடிய கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அகழாய்வில் மூன்று வகையான, பெருங்கற்கால ஈமச்சின்னம் எனப்படும் கல்லறைகளைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அவற்றுள் ஒரு கல்லறையில் மனித மண்டை ஓடு உள்ளது என்றும் தொல்லியல்துறை திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அந்த மண்டை ஓடு மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. கொடுமணல் அகழாய்வில் 662 உடைந்த பல வகையான வளையல்களும் 343 கல்மணிகளும் இரும்பு, கண்ணாடி, ஆணிகள், உளி, கத்தி போன்ற இரும்பினால் தயார் செய்த 193 பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இப்பொருள்கள் அனைத்தும் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்தியவை என்றும் ஜெ.ரஞ்சித் கூறியுள்ளார்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடைபெறும் அகழாய்வில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மூன்று அடி நீளமுள்ள அந்த எலும்புக்கூடு விரைவில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

