தேனி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக சான்றிதழ் அளித்துள்ளனர்.
இதையடுத்து, குழந்தையை இடுகாட்டுக்குத் தூக்கிச் சென்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, திடீரென இதயத்துடிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையறிந்த தேனி மக்களிடம் பெரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒருங்கே ஏற்பட்டது.
தேனி அருகே உள்ள ஒரு தம்பதிக்கு குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் சான்றிதழ் அளித்தனர். குழந்தையை மயானத்திற்கு பெற்றோர் எடுத்துச் சென்றபோது அந்தக் குழந்தையின் இதயம் துடிக்கத் தொடங்கியது.
இதனையடுத்து அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியுடன் பெற்றோர் குழந்தையை மீண்டும் தேனி அரசு மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினர்.
தேனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.