விழுப்புரம்: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக எதிர்க்கட்சியானது. எதிர்க்கட்சி யாக இருந்த திமுக இப்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.
இதுபோன்ற ஓர் எதிர்பாராத நிலை ஏற்படுவதற்கு பாஜகவுடன் அமைத்த கூட்டணிதான் காரணம். இதனால்தான், அதிமுகவின் வெற்றி கைநழுவிப்போனது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இந்தக் கருத்து அதிமுக-பாஜகவுக்கு இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளதாகவும் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் இக்கட்சிகளின் கூட்டணி தொடர்வது சந்தேகம்தான் என்றும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத ஒன்பது மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தும்படி மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலுக்கான பணி குறித்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நடந்த கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் சி.வி.சண்முகம் பேசினார்.
"திமுகவின் ஆட்சி வரவேண்டும் என்பதற்காக மக்கள் யாரும் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை. மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து திமுகவினர் ஆட்சிக்கு வந்துவிட்டனர்.
"அதிமுக ஆட்சி அமைக்கும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு. ஆனால், கூட்டணிக் கணக்கு சரியில்லை. நாம் பாஜகவுடன் மட்டும் கூட்டணி சேராமல் இருந்திருந்தால் சிறுபான்மையினரின் வாக்குகள் முழுமையாக அதிமுகவுக்குக் கிடைத்திருக்கும். தமிழகத்தில் அதிமுக ஆட்சியே இப்போதும் தொடர்ந்திருக்கும்," என்று தெரிவித்தார்.
"இப்போதும் நாம் வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் சுறுசுறுப்புடனும் ஒற்றுமையுடனும் பணியாற்ற வேண்டும்," என்றார்.
முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியபோது, திமுக வின் வாக்குறுதிகளை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்றும் அதிமுகவின் வாக்குறுதிகள் மக்களிடம் போய் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
கே.டி. ராகவன் பதிலடி
இதற்கிடையே, சி.வி சண்முகத்தின் கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சி.வி.சண்முகம் கூறியதற்குப் பதிலடி தரும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், "எங்களால் தோற்றீர்களா? உங்க ளால்தான் நாங்கள் தோற்றோம் என்ற எண்ணம் எங்களிடமும் உள் ளது," எனக் குறிப்பிட்டுள்ளார்.

