கேரளாவில் அதிகரிக்கும் தொற்று: தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
சென்னை: தமிழகத்தில் 3,590 பேருக்கு கறுப்புப் பூஞ்சை பாதிப்புள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், பூஞ்சை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
"தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கறுப்புப் பூஞ்சை நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் கறுப்புப் பூஞ்சை நோய் தாக்கிய 778 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
"அவர்களில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 456 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கொரோனா நிலவரம்
இதற்கிடையே, தமிழகத்தில் நேற்று முன்தினம் 3,211 பேருக்கு புதிதாக கொரோனா கிருமி தொற்றியது உறுதியாகி உள்ளது.
ஒரே நாளில் மேலும் 57 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டனர். இதனால் ஒட்டுமொத்த மரண எண்ணிக்கை 33,253ஆக கூடியுள்ளது.
மாநிலம் முழுவதும் தற்போது 33,665 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கேரளாவில் தொற்றுப்பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையொட்டி தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
கேரளாவில் இருந்து தொற்று பாதிப்பு உள்ளவர்கள் கோவை, தேனி, கன்னியாகுமரி எல்லைப் பகுதிகள் வழியாக தமிழகத்துக்குள் நுழைந்துவிடாதபடி தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இருந்து தொற்று அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு தமிழகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாகவும் மாநிலத்தின் அனைத்து எல்லைகளிலும் மருத்துவக் குழுவினர் சிறப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, நெல்லையில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களில் நீண்ட நேரம் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

