சென்னை: அதிமுக, பாஜக இடையேயான மோதல் பெரிதாகி வருகிறது.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகிய இருவரும் பாஜகவை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுகவுக்கு பாஜகவைச் சேர்ந்த யாரும் கட்டளையிட முடியாது என்றார்.
"மூடிய அரங்குக்குள் நடக்கும் அரசியல் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் வெளிப்படும். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வெளிப்படையாக சில கருத்துகளைத் தெரிவித்தார்.
"ஒருவேளை அவர் அதிகாரபூர்வமாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்து சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தால் அதை கட்சியின் கருத்தாக கருதலாம். அப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரலாம். அப்படி இல்லாத - பட்சத்தில் இது குறித்து யாரும் எங்களுக்கு கட்டளையிட முடியாது.
"நாங்கள் எங்களது வேலையைப் பார்க்கிறோம். அதிமுக மீது நடவடிக்கை எடுக்கச் சொல்ல பாஜகவினருக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை," என்றார் ஜெயக்குமார்.
பாஜகவுடனான கூட்டணி நீடிக்குமா என்பதை ஒட்டுமொத்த கட்சியும் தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பாஜக, பாமகவுடன் கூட்டணி வைத்ததுதான் அதிமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் கூறியுள்ளார்.
இது தமது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினரின் ஆதரவு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்றும் இதன் எதிரொலியாகவே பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பாமகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் தாழ்த்தப்பட்டோர்களின் வாக்குகளை அதிமுகவால் பெற முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், சிறுபான்மையினருக்கு பாஜகவுடன்தான் கொள்கை ரீதியிலான முரண்பாடு என்றும் அவர்களுக்கு அதிமுக மீது எந்தவித கோபமோ வருத்தமோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார் அண்ணாமலை
சென்னை: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியில் சேர்ந்த ஓராண்டுக்குள் அவர் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் காவல்துறை அதிகாரியான அண்ணாமலை, அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோல்வி கண்டார். எனினும் அவருக்கு பெரிய பதவி அளிக்கப்பட்டுள்ளது.

