சென்னை: அதிமுக, பாஜக இடையேயான தோழமை மேலும் வளரவேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே நிலவிவரும் கருத்து வேறுபாடுகள் தொடர்பான சலசலப்பு சற்றே குறைந்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அக்கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்த முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை புதிய தலைவராகி உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதற்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, அதிமுக, பாஜக இடையேயான தோழமை இன்றுபோல் என்றும் வளரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக, பாஜக இரண்டாம் மட்டத்திலான தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததே தேர்தல் தோல்விக்குக் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இருதரப்பில் இருந்தும் சில சூடான அறிக்கைகள் வெளியாகின. இதையடுத்து பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக தலைமை அறிவித்தது. இந்நிலையில் அண்ணாமலையும் இக்கூட்டணி தொடரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தமிழகத்தில் இளையர்களை அதிக அளவில் கட்சியில் சேர்க்கவேண்டும் என பாஜக மேலிடம் அறிவுறுத்தி இருப்பதாகத் தகவல்.
அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க புதிய தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.