சென்னை: தான் பதவியை எதிர்பார்த்து திமுகவில் இணைய வில்லை என்றும் தமிழக அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழி நடத்தும் விதம் தங்களை ஈர்த்ததால் திமுகவில் வந்து சேர்ந்த தாகவும் தோப்பு வெங்கடாசலம் (படம்) தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அவருடன் அவரது ஆதரவாளர்கள் 905 பேரும் திமுகவில் இணைந்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக அரசை முதல்வர் அற்புதமாக வழிநடத்தி வருகிறார். நேர் வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவருடைய பாங்கு எங்களை ஈர்த்தது. பதவியேற்றதும் பெண்களுக்காக அவர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியதை அரசியல் ஆர்வலர்கள் உற்று கவனித்து வருகிறார்கள். ஸ்டாலின் சமூக நீதியுடன் செயல்படுகிறார்," என்று பாராட்டினார்.

