சென்னை: தலைநகர் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் (11ஆம் தேதி) கொரோனா காரணமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்றும் இது ஒரு பெரிய சாதனைதான் என்றும் தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதிதான் சென்னையில் கொரோனா உயிரிழப்புபூஜ்ஜியமாக இருந்தது. அந்த நிலைமை இப்போது ஏறத்தாழ 139 நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரும்பியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்டபோது, கிருமித் தொற்றால் தினமும் 35,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, ஊரடங்கு கட்டுப்பாடு, தடுப்பூசி போடும் பணியைத் துரிதப்படுத்துவது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்ததன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கிருமி பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 51வது நாளாக இப்பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 2,775 பேருக்கு மட்டுமே கிருமி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் சென்னையைச் சேர்ந்தோர் 171 பேர்.
முதல் அலையிலும் சரி, இரண்டாம் அலையிலும் சரி கொவிட்-19 தாக்கத்தால் சென்னை மோசமாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, சென்னையில் கடந்த மே மாதம் 12ஆம் தேதி அன்று அதிகபட்சமாக 7,564 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.
கடந்த மே 5ஆம் தேதி அன்று 107 பேர் அதிகபட்சமாக சென்னை யில் மட்டும் உயிரிழந்த நிலையில், அதன்பின்னர் இந்தப் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது.
இந்நிலையில், மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் இறந்த 47 பேரில் ஒருவர் கூட சென்னையில் இல்லை. இதுவரை தமிழகத்தில் 33,418 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இப்போது கோவை மாவட்டத்தில் 298 பேருக்கும் தஞ்சாவூரில் 210 பேருக்கும் இப்பாதிப்பு உறுதி யாகி உள்ளது. இந்த இரு மாவட்டங்களில் மட்டும்தான் கிருமி பாதிப்பு 200க்கு மேல் உள்ளது என தகவல்கள் கூறியுள்ளன.

