சென்னை: தமிழகத்தில் தளர்வு களுடன் கூடிய ஊரடங்கு மீண்டும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதை அடுத்து, யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு பேருந்துகள் செல்வதற்கு அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஏறக்குறைய 70 நாள்களுக்குப் பிறகு நேற்று காலையில் இருந்து தமிழகத்தில் இருந்து புதுவைக்கும் புதுவையில் இருந்து தமிழகத்துக்கும் பேருந்துப் போக்குவரத்து தொடங்கியதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் பேருந்துகளில் மக்கள் பயணம் செய்தனர்.
தமிழகத்தில் கிருமிப் பரவல் நாள்தோறும் ஒடுங்கி வரும் நிலையில், புதிய ஊரடங்குத் தளர்வுகளும் கட்டுப்பாடுகளும் வரும் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனுமதி நீட்டிப்பு
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 பேரும் இறுதிச் சடங்குகளில் 20 பேரும் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர அனைத்துப் பகுதிகளிலும் ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணியைத் தொடரலாம்.
உணவகங்கள், தேநீர்க் கடைகள், நடைபாதைக் கடைகள் உள்ளிட்ட கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்படலாம்.
மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகளை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொடரும் தடை, கட்டுப்பாடு
திரையரங்குகளைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மதுக் கூடங்கள், சமுதாய, அரசியல் கூட்டங்கள், கலை, கலாசார நிகழ்வுகளை நடத்த தடை தொடர்கிறது.
பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், உயிரியல் பூங்காக்கள்;
அனைத்துலக விமானப் போக்குவரத்து;
நீச்சல் குளங்களைத் திறப்பதற்குத் தடை தொடர்கிறது.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியைப் பின்பற்றுவது அவசியம்.
கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை மீறுவோர்க்கு அபராதம் விதித்து, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

