செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
b048a79a-c841-40fe-8af3-2bc82de9744a
-

சுப முகூர்த்த நாளில் குழந்தை

பெற்றெடுப்பதை தடுக்க நடவடிக்கை

சென்னை: தாங்கள் விரும்பும் சுப முகூர்த்த நாளில் ராசி, நல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பெற்றெடுப்பது இயற்கைக்கு முரணானது எனவும் அதனை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் மகப்பேறு சிகிச்சை 60% ஆக இருப்பதாகவும் இதனை 80% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

பேருந்தில் இலவசப் பயணம்: மகளிருக்கும் பயணச்சீட்டு

சென்னை: அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு நேற்று முதல் பேருந்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எந்தெந்த வழித்தடத்தில் எத்தனை பேர் பயணித்தனர் என்பதைக் கண்டறிய பயணச்சீட்டு வழங்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது போக்குவரத்துத் துறை. தமிழக முதல்வராக கடந்த மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், பெண்களைத் தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திற னாளிகள், அவரது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என உத்தரவிட்டார்.

30 பயணிகள் உயிரைக் காப்பாற்றி விட்டு உயிரிழந்த ஓட்டுநர்

ஈரோடு: அரசுப் பேருந்தை இயக்கியபோது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், 30 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி விட்டு அவர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள மணியங்காட்டூரை சேர்ந்தவர் செல்வராஜ், 52. இவர் வழக்கம் போல 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கவுந்தபாடியிலிருந்து பெருந்துறை நோக்கி பேருந்தை இயக்கினார். அப்போது, பேருந்து வெள்ளாங்கோயில் வரும் போது திடீரென ஓட்டுநர் செல்வராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக செல்வராஜ் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு மயங்கி விழுந்தார்.

பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக ஓட்டுநரை மீட்டு அவசர சிகிச்சை வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தனது உயிர் போகும் தருணத்திலும் பயணிகளைக் காக்கும் வகையில் செயல்பட்ட ஓட்டுநர் செல்வராஜின் மரணம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிருக்குப் போராடும் சிறுமி; வரியைக் குறைக்க வலியுறுத்து

நாமக்கல்: நாமக்கல் சிறுமியின் சிகிச்சைக்கு ரூ.16 கோடி நிதி திரட்டப்பட்டும் மத்திய அரசு மருந்துக்கான வரியை நீக்காததால் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் வசித்து வரும் சதீஷ்-பிரியதர்ஷினி ஆகியோரின் மகள் மித்ரா, 2. அண்மையில் மித்ராவை உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதித்தபோது குழந்தைக்கு தண்டுவட சிதைவு நோய் இருப்பது கண்டறியப் பட்டது. இதற்கான தடுப்பு மருந்து சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்படுகிறது. அதை வாங்க ரூ.16 கோடி தேவைப்படும் என்ற நிலையில், சமூக வலைத்தளங்கள் மூலம் நிதி அளிக்க பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். பலர் தாராளமாக நிதி அளித்ததைத் தொடர்ந்து ரூ.16 கோடி பணம் கிடைத்துள்ளது. ஆனால், மருந்தை இந்தியாவிற்குள் கொண்டுவர ரூ.6 கோடி இறக்குமதி வரி உள்ளதால் அதை நீக்கும்படி மத்திய அரசுக்கு பெற்றோர் கோரியுள்ளனர்.