ஆலந்தூர்: தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் தணியாத நிலையில், ஸிக்கா கிருமியால் 19 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தக் கிருமி தமிழகத்திற்குள் நுழைந்துவிடாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலை யங்களில் தீவிர பரிசோதனைகள் தொடர்கின்றன.
சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கும் கேரளப் பயணிகளைப் பரிசோதிக்கும் முறையை நேற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஆய்வு செய்தார்.
கேரளாவில் இருந்து சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்துக்கு திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூா் ஆகிய விமான நிலையங்களில் இருந்து தினமும் ஏழு விமானங்கள் வருகின்றன. அவற்றில் 600 பயணிகள் பயணம் செய்கின்றனா்.
இந்தப் பயணிகளை மருத்துவப் பரிசோதனைக்கு பிறகே வெளியே அனுப்புகின்றனா். அதற்காக செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த 30 ஊழியா்கள் நியமிக்கப்பட்டு உள்ளனா்.
அதேபோல், கேரளாவில் இருந்து வாகனங்கள், ரயில்கள் மூலம் தமிழகத்துக்கு வரும் பயணிகளும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
எனினும், தமிழகத்தில் இதுவரை யாரும் இந்த ஸிக்கா கிருமியால் பாதிக்கப்படவில்லை என்றும் கேரளத்திலிருந்து வரும் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை கட்டாயம் நடத்தப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே, கொரோனா இரண்டாம் அலை தணிந்து வரும் சூழலில், அடுத்த ஆபத்து ஸிக்கா வடிவில் தமிழகத்தில் தலைகாட்டு வது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
டெங்கிக் காய்ச்சலை ஏற்படுத்தும் 'ஏடிஸ்' கொசுக்கள்தான் ஸிக்கா கிருமியைப் பரப்புவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதும் 65 இடங்களில் ஏடிஸ் வகை கொசுக்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் ஸிக்கா கிருமியைப் பரப்பும் கொசுக்கள் கண்டறி யப்படவில்லை என தெரியவந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.

