சென்னை: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி விதிப்பதற்குத் தடை விதிக்கும்படி கோரிய நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்த அபராதத் தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வார காலத்தில் செலுத்துவதற்கும் விஜய்க்கு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரக காரை இறக்குமதி செய்துள்ளார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தும்படி வணிக வரித் துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்தும் நுழைவு வரியில் இருந்து தடை கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், "புகழ்பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்தவேண்டும். இந்த வரி வருமானம்தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு," என்று குறிப்பிட்டார்.
"வரி என்பது கட்டாயமாக வழங்கவேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்கக்கூடிய நன்கொடை அல்ல. வரிஏய்ப்பு என்பது ஒரு தேசத் துரோகம்," என்றும் காட்டமாகப் பேசினார்.
மக்கள் செலுத்தக்கூடிய வரி பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகக் கூறியவர், கதாநாயகர்கள் ஒரு உண்மையான நாயகன்களாக இருக்கவேண்டுமே தவிர 'ரீல்' நாயகன்களாக இருக்கக் கூடாது என்றும் நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
நாடாளும் அளவிற்கு நடிகர்கள் வளர்ந்துள்ள தமிழ்நாட்டில், கதாநாயகர்கள் உண்மையான நாயகன்களாக இருக்கவேண்டுமே தவிர, கதைவிடும் நாயகன்களாக இருக்கக்கூடாது.
உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்

