திருப்பூர்: பொல்லிகாளிபாளையம் அருகே 35 மயில்களுக்கு நஞ்சு வைத்து விவசாயி ஒருவர் கொன்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, விவசாயி மீது வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பொல்லி காளிபாளையம் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கடந்த 9ஆம் தேதி அன்று அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் மொத்தம் 35 மயில்கள் இறந்து கிடந்தன.
இதனைக் கண்டு அதிர்ந்த மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அரசு கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு, இறந்த மயில்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்பின்னர், இறந்த மயில் கள் அங்கேயே குழி தோண்டி எரியூட்டப்பட்டன.
அதன்பின்னர் அமராவதி வனத் துறை அலுவலகத்தில் இருந்து டிக்ஸி என்ற மோப்ப நாயை அழைத்து வந்து இத்தனை மயில்களும் ஒரே நேரத்தில் இறந்ததற்கான காரணம் குறித்து துப்பு கிடைக்கிறதா எனத் தேடினர்.
அப்போது மயில்கள் இறந்து கிடந்த இடத்தில் இருந்து ஒரு விவசாயியின் தோட்டம் வரை டிக்ஸி நாய் வேகமாக ஓடியது.
அங்கு ஒரு மயில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. அந்த இடத்தில் டிக்ஸியும் நின்றுவிட்டது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் விவசாயி ஒருவரிடம் போலிசார் விசாரணை நடத்தினர்.
அவரது தோட்டத்திற்கு வரும் ஏராளமான மயில்கள் விவசாய விதைகளைத் தின்றுவிட்டு செல்வதால் நஷ்டம் ஏற்படுவதாகக் கருதி மயில்கள் உண்ணும் உணவில் விஷம் கலந்து போட்டதாகத் தெரிவித்தார்.
அதனை சாப்பிட்ட மயில்கள் மயங்கி விழுந்து இறந்தது விசாரணையில் தெரியவந்தது.

