பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மெரினா கலங்கரை விளக்கம் அருகே தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை தலைமையில் போராட்டம் நடந்தது. கலங்கரை விளக்கம் முதல் அம்பேத்கர் மணி மண்டபம் வரை சைக்கிள், மாட்டு வண்டி ஓட்டி தங்கள் எதிர்ப்பை அவர்கள் தெரிவித்தனர். ஆவடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து ஊர்வலம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஐந்து பெண்கள் உட்பட 70 பேரை போலிசார் கைது செய்தனர். குரோம்பேட்டையில் 40க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சமையல் எரிவாயுவின் விலை கண்ணீர் வரவழைப்பதாகக் கூறி பெண்கள் மண் அடுப்பு, விறகுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்: ஏஎஃப்பி

