நாளை அண்ணாமலை பொறுப்பேற்பு
சென்னை: பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், கே.அண்ணாமலை புதிய தலைவராக அறிவிக்கப்பட்டாா். இதைத்தொடர்ந்து, சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நாளை 16ஆம் தேதி பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை முறைப்படி பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளாா். நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன், தேசிய பொதுச்செயலாளா் சி.டி.ரவி, மூத்த தலைவா் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளா் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களின் எட்டு மாநில முதல்வர்களுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, நாளை வெள்ளிக்கிழமை தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநில முதல்வர்களுடன் காணொளி வழி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மூன்றாவது அலையைத் தடுக்கும் பணியைத் தீவிரப்படுத்துவது குறித்தும் தளர்வுகள் வழங்குவதில் கவனம் தேவை என அறிவுறுத்த உள்ளதாகவும் தெரிகிறது.
கோவில் யானைகளுக்கு குளியல் அறை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இரு நாள்கள் ஆய்வு செய்த இந்து சமயம், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் 30 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது முதல்வரின் ஆலோசனையின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், யானைகள் குளிப்பதற்கு அந்தந்த கோவில்களில் குளியல் அறை அமைக்கப்பட்டு உள்ளது," என்றார்.
நான்கு ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி
சென்னை: ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.20 லட்சத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மதுரை மாவட்டம், சோளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், கிருஷ்ணகிரி மாவட்டம், ராகிமானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்; கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த், திருப்பத்துார் மாவட்டம், காக்கங்கரை கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன் ஆகியோர் பணியின் போது உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தலா ரூ.20 லட்சத்தை கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியில் இருந்து வழங்கினார்.
குளத்தில் மூழ்கிய சிறுமியைக்
காப்பாற்ற முயன்ற ஐவர் மரணம்
திருவள்ளூர்: திருவள்ளூரில் குளத்தில் மூழ்கிய சிறுமியைக் காப்பாற்ற முயன்ற சம்பவம் தொடர்பில், ஒரே நேரத்தில் ஐவர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், புதுக்கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் குளத்தில் வழக்கம்போல சிலர் குளித்துக்கொண்டிருந்தபோது சிறுமி ஒருவர் மூழ்கியதாகத் தெரிகிறது. அந்த சிறுமியைக் காப்பாற்ற முயன்ற மற்ற இரண்டு சிறுமிகளும் நீரில் மூழ்க அவர்களைக் காப்பாற்ற முயன்ற 38 வயது பெண்மணியும் நீரில் மூழ்கினார். இந்தச் சம்பவத்தில் மூன்று சிறுமிகள் உட்பட ஐவர் உயிரிழந்தனர்.

