மதுரை: மதுரை விமான நிலை யத்தை அனைத்துலக விமான நிலையமாக மாற்றும் திட்டம் எது வும் தற்போதைக்கு இல்லை என உயர் நீதிமன்றத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
மதுரை விமான நிலையத்தின் ஓடுதள விரிவாக்கப் பணியை விரைவில் மேற்கொள்ளக் கோரி தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இதேபோல், மதுரை விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அறிவிக்கக்கோரி தமிழக சுற்றுலா முகவர்கள் சங்கத் தலைவர் சதீஷ்குமார் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இவர்களது மனுக்கள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை துணைச் செயலர் நரேந்திர சிங் பதில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில், "அனைத்துலக விமானப் போக்குவரத்துக்கான வாய்ப்புகள், விமானங்களின் தேவை, இரவில் விமானங்கள் தரையிறங்கும் வசதி, போதுமான ஓடுதள வசதி உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில்தான் ஒரு விமான நிலையம் அனைத்துலக விமான நிலையமாக அறிவிக்கப்படும். இதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் வேண்டும்.
"ஆனால், மதுரை விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அறிவிக்கும்படி மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை இப்போதைக்கு கோர முடியாது.
"ஏனெனில், ஓடுதளம் விரிவாக் கத்துக்காக கூடுதலாக 615.92 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலத்தை தமிழக அரசு இதுவரை தரவில்லை.
"நிலத்தை கையகப்படுத்தாமல், ஓடுதளம் அருகே செல்லும் நெடுஞ்சாலையையும் மாற்றாமல் ஓடுதள விரிவாக்கப் பணியை மேற்கொள்ள முடியாது.
"இருப்பினும் இதுதொடர்பாக விமானப் பாதுகாப்புப் பிரிவுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. முடி வுக்காகக் காத்திருக்கிறோம்," என்று பதில் மனுவில் கூறப்பட்டி ருந்தது.
இதைப் பதிவு செய்துகொண்டு, மனுக்களை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

