திரையரங்குகளைத் திறப்பது குறித்து அமைச்சர் சாமிநாதன் விளக்கம்
சென்னை: சென்னை கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் நடந்து வரும் பராமரிப்புப் பணிகளைச் செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "கொரோனா மூன்றாவது அலை குறித்து உலக சுகாதார அமைப்பு, மருத்துவ நிபுணர்கள், மத்திய அரசு ஆகிய அனைத்தும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதை நாம் மறந்து விடக்கூடாது," என்று குறிப்பிட்டவர், "இனியும் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்படும்போதுதான் திரையரங்குகளைத் திறக்க முடியும். முதல்வருடனும் மருத்துவ நிபுணர்களுடனும் கலந்து ஆலோசித்த பின்னரே இதுகுறித்து ஒரு முடிவெடுக்க முடியும்," என்று கூறினார்.
குளத்தில் மூழ்கி இறந்த ஐவருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி அறிவிப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் மூன்று சிறுமிகள் உள்பட ஐவர் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கும்மிடிப்பூண்டி என்ற பகுதியில் உள்ள அங்காளம்மன் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒரு சிறுமி நீரில் மூழ்குவதைக் கண்டு, அவரைக் காப்பாற்றச் சென்ற ஐவர் ஒருவர் பின் ஒருவராகக் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
1,000 அட்டைகளுக்கு மேல் உள்ள
நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்படும்
திருநெல்வேலி: தமிழகத்தில் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் சக்கரபாணி தெரிவித்துள்ளார். "விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1,000 குடும்ப அட்டைகளுடன் உள்ள நியாயவிலைக் கடைகள் 5,000க்கும் மேல் உள்ளன. இவற்றை எல்லாம் உடனடியாக இரண்டாகப் பிரித்து பகுதி நேரக் கடைகளாக அறிவிக்கப் படும்," என்று அமைச்சர் கூறியுள்ளார்.

