செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
67130efd-38b7-4d4a-bfa7-43a8408f689f
-

தமிழிசை: 'நீட்' தேர்வு அவசியம்

புதுச்சேரி: நானும் ஒரு மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன், "நீட் தேர்வு அவசியம் தேவை. ஒரு மருத்துவக் கல்லூரி உரிமையாளரின் மகளாக இருந்தாலும்கூட நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராக முடியும் என்ற வரைமுறை இருந்தால்தான் சிறந்த, தகுதியான மருத்துவர் மக்களுக்குக் கிடைப்பார்," என புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவப் படிப்பிற்கான 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிைலயில், இதற்கு தமிழகம் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் தேர்வுக்கு புதுவை மாநில கல்வித் துறை ஏற்கெனவே பச்சைக்கொடி காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுடுமண் பெண் பொம்மை கண்டெடுப்பு

திருப்புவனம்: கீழடி ஏழாம் கட்ட அகழாய்வின்போது, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள அகரத்தில் சுடுமண் பெண் முக பொம்மை (படம்) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அகரத்தில் ஏழு குழிகள் தோண்டப்பட்டு உறை கிணறு, பானைகள், பானை ஓடுகள், நத்தைக் கூடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு வருகின்றன. மூன்றாவது குழியில் 65 செ.மீ. ஆழத்தில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்கள், மூக்கு, பெருத்த உதட்டுடன் உள்ள இந்த பொம்மையின் நெற்றியிலும் காதிலும் ஆபரணங்கள் உள்ளன. தலைமுடியை இடதுபுறம் பெரிதாக கொண்டை போட்டுள்ளது போல் இந்தப் பொம்மை முகம் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீரர்களுக்கு ஊக்கமளித்த கமல்

சென்னை: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் இம்மாதம் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள தமிழக தடகள வீரர், வீராங்கனைகளான ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோருடன் மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் காணொளி வழி தொடர்பு கொண்டு வாழ்த்துகள் கூறினார். "வறுமையில் உழன்றபோதும் சாதனையாளர்களாகத் திகழும் நீங்கள்தான் உண்மையான உலக நாயகர்கள். இந்தியாவின் தங்கச் சுரங்கம் நீங்கள், வெறும் தங்கப் பதக்கம் மட்டுமல்ல. நீங்கள் கற்றவற்றை மற்றவர்களுக்கும் கற்றுத்தர வேண்டும். போட்டியை நிதானமாக, பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள். வெற்றியுடன் திரும்பும் உங்களைப் பாராட்ட நாங்கள் ஆவலுடன் காத்துக்கொண்டி ருக்கிறோம்," என்று கூறிய கமலுக்கு வீரர்கள் நன்றி கூறினர்.

94 குழந்தைகளுக்கு நினைவஞ்சலி

கும்பகோணம்: கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் திடீரென்று மூண்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி முன்பு தங்களது குழந்தைகளின் படங்களுக்கு மாலை அணிவித்து, மெழுகுவத்தி ஏற்றி பெற்றோர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இதர பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் மலா் தூவி, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.

ஐந்து ஆசிரியைகளிடம் விசாரணை

சென்னை: சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு தொடர்பில், அவர் மீது பதியப்பட்ட மூன்று வழக்குகளுக்கு 30 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலிசார் தெரிவித்துள்ளனர். அவரது பள்ளி ஆசிரியைகள் ஐவரிடம் திங்களன்று விசாரணை நடத்த உள்ளனர்.