'கொங்கு நாடு': கனவா கற்பனையா

'கொங்கு நாடு': கனவா கற்பனையா

3 mins read
25b86e68-00b5-4dc2-857c-ad5a67e1eae5
-

திமுக கூட்டணிக் கட்சி விதைத்ததை முளைக்க வைத்து அறுவடை செய்ய முயல்கிறது பாஜக

தமி­ழ­கத்­தில் கொரோனா செய்­தி­களை ஓரங்­கட்டி பேசு­பொ­ரு­ளாக மாறி இருக்­கிறது கொங்கு நாடு விவ­கா­ரம். தமி­ழ­கத்­தின் மேற்கு மண்­ட­லத்தை கொங்கு நாடு என்று தனி மாநி­ல­மாக அறி­விக்க வேண்­டும் என கடந்த வாரம் கோவை வடக்கு மாவட்ட பாஜக தீர்­மா­னம் நிறை­வேற்­றி­ய­தும் அர­சி­யல் களத்­தில் சூடு கிளம்­பி­யது.

ஆனால், உண்­மை­யில் கொங்கு நாடு என்­னும் ஒரு பிரி­வி­னையை முதன்­மு­த­லில் கையில் எடுத்­த­து தற்­போது திமுக கூட்­ட­ணி­யில் இடம்­பெற்று இருக்­கும் கொங்கு நாடு மக்­கள் தேசிய கட்­சி­தான். அதன் தலை­வர் ஈஸ்­வ­ரன் 2015 ஆகஸ்ட் மாதமே "இரண்டு கோடி மக்­க­ளுக்கு ஒரு மாநி­லம் என்ற கணக்­கில் கொங்கு நாடு என்று பிரித்து தனி மாநி­லம் உரு­வாக்க வேண்­டும்," என்று தெரி­வித்து இருந்­தார். அந்த ஆயு­தத்தைத் தான் தற்­போது பாஜக கையில் எடுத்­துள்­ள­தாக பேசப்­ப­டு­கிறது.

உண்­மை­யில் அப்­படி ஒரு மாநில யோசனை பாஜ­க­வ­சம் இருக்­கி­றதா என்­பது கேள்­விக்­கு­றி­தான். கார­ணம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாநில பாஜக தலை­வ­ராகப் பொறுப்­பேற்ற அண்­ணா­மலை (படம்) 2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் 150 தொகு­தி­களில் வென்று தமி­ழ­கத்­தில் ஆட்சி அமைப்­போம் என்று கூறி­னார்.

எனவே பாஜ­க­வின் குறி தமி­ழ­கம் மீதா அல்­லது தனி மாநி­லம் மீதா என்­பதும் கொங்கு நாடு முழக்கம் என்பது எதிர்காலத்திற்கான கனவா அல்லது கற்பனையா என்ப தும் இன்னும் தெளிவாகவில்லை.

அப்­படி ஒரு பிரி­வி­னையை பாஜக முன்­னெ­டுக்­க­வில்லை என்­றும் ஒன்­றிய அரசு என்ற மத்­திய அரசை குறு­கிய கண்­ணோட்­டத்­து­டன் அழைப்­ப­வர்­க­ளுக்­குத்­தான் கொங்கு நாடு பயம் ஏற்­பட்­டுள்­ளது என்­றும் பாஜக மாநில துணைத் தலை­வர் நயி­னார் நாகேந்­தி­ரன் தெரி­வித்­துள்­ளார்.

பத்து மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய கொங்கு மண்­ட­லத்­தில் 68 சட்­ட­மன்­றத் தொகு­தி­கள் உள்­ளன. இவற்­றில் பெரும்­பா­லான தொகு­தி­கள் பன்­னெ­டுங்­கா­ல­மாக அதி­மு­க­வுக்கு ஆத­ர­வாக விளங்கி வரு­கின்­றன.

அண்­மை­யில் நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தமி­ழ­கம் முழு­வ­தும் பேரெ­ழுச்­சி­யு­டன் திமுக வெற்றி­ பெற்றபோதி­லும் கொங்கு மண்­ட­லத்­தின் 68 தொகு­தி­களில் 44ல் அதி­முக கூட்­டணி வென்­றது. திமு­க­வுக்கு பூஜ்­யமே மிஞ்­சி­யது. அதே நேரம் கோவை, தரு­ம­பு­ரி­யில் உள்ள 15 தொகு­தி­க­ளை­யும் அதி­மு­கவே அள்­ளி­யது. அத்­து­டன் சேலத்­தில் உள்ள 11 தொகு­தி­களில் 10ல் அதி­முக கூட்­ட­ணியே வென்­றது.

கொங்கு நாடு: கோவை, நீல­கிரி, திருப்­பூர், ஈரோடு, நாமக்­கல், சேலம், தரு­ம­புரி, கிருஷ்­ண­கிரி மாவட்­டங்­களில் அனைத்து பேர­வைத் தொகு­தி­கள், கரூர் மாவட்­டத்­தில் குளித்­தலை தவிர கரூர், கிருஷ்­ண­ரா­ய­பு­ரம், அர­வக்­கு­றிச்சி, திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் பழனி, ஒட்­டன்­சத்­தி­ரம், திண்­டுக்­கல், வேட­சந்­தூர் பேர­வைத் தொகு­தி­கள் கொங்கு மண்­ட­லத்­துக்­குள் வரு­கின்­றன.

மொத்­த­முள்ள வாக்­கா­ளர்­களில் 30% கொங்கு வேளா­ளக் கவுண்­டர்­கள், 30% மொழி­வழி சிறு­பான்­மை­யி­னர் (இதில் 15% அருந்­த­தி­யர்­கள்), 35 % செங்­குந்த முத­லி­யார்­கள், வேட்­டுவ கவுண்­டர்­கள், நாட்டு கவுண்­டர்­கள், கோவை செட்­டி­யார்­கள், ராம­நா­த­பு­ரம் மாவட்­டத்­தில் இருந்து குடி­யே­றிய முக்­கு­லத்­தோர், கொங்கு சாணார்­கள், தூத்­துக்­குடி, திரு­நெல்­வேலி மாவட்­டங்­களில் இருந்து குடி­பெ­யர்ந்த இந்து-கிறிஸ்­தவ நாடார்­கள் உள்­ளிட்ட பிற தமிழ் சமூ­கத்­தி­னர் என்ற சமூக அடுக்­கில்­தான் மக்­கள் வாழ்­கின்­ற­னர். எஞ்­சிய 5% மத­சி­று­பான்­மை­யி­னர்.

2024 மக்­க­ள­வைத் தேர்­த­லுக்கு முன்பு கொங்கு மண்­ட­லத்­தில் பாஜ­கவை வலு­வா­கக் காலூன்ற வைக்­கும் முயற்­சி­யில் சில அர­சி­யல் நகர்­வு­களை பிர­த­மர் மோடி-அமித் ஷா கூட்­டணி செய்­யத் தொடங்­கி­யுள்­ளது.

தமி­ழ­கத்­தின் பிற மண்­ட­லங்­களை ஒப்­பி­டும்­போது கொங்கு மண்­ட­லத்­தில் இயல்­பா­கவே மென்­மை­யான ஹிந்­துத்­துவா வாக்­கா­ளர்­கள் ஆக அதி­கம். மேலும், மத சிறு­பான்­மை­யி­ன­ரின் வாக்­கு­வங்கி மிக­வும் குறைவு.

இத­னால், பாஜக வேர் பிடித்து வளர நல்ல விளை­நி­லம் கொங்கு மண்­ட­லம்­தான் என்­பது மோடி-அமித் ஷாவின் கணக்கு. இத­னால்­தான் 'கொங்கு நாடு' என்ற புதிய முழக்­கத்தை வெளிப்­ப­டை­யாக வர­வேற்­கா­விட்­டா­லும் மறை­மு­க­மாக ஆத­ரிக்க முற்­பட்­டி­ருக்­கிறது பாஜக.

இது ஒரு­பு­றம் இருக்க, மத்­திய அரசை 'ஒன்­றிய அரசு' என திமுக விமர்­சிப்­பது 'கொங்கு நாடு' விவ காரம் எழுப்­பப்­பட்ட பின்­னர் ஓர­ளவு அடங்கி இருப்­ப­தாக தமி­ழக அர­சி­யல் களத்­தில் பேசப்­ப­டு­கிறது.