ராமேஸ்வரம்: புதிய மீன்பிடி திருத்த சட்டத்தைக் கண்டித்து நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் படகில் கறுப்புக் கொடி ஏற்றி வேலை நிறுத்தம் செய்தனர்.
நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் புதிய மீன்பிடி திருத்த சட்டத்தில், எல்லை தாண்டும் மீனவர்களுக்கு அபராதத்துடன் சிறைத்தண்டனை, மீன்பிடிக்க அனுமதிச் சீட்டுக்குக் கட்டணம், பிடித்து வரும் மீனுக்கு விலை நிர்ணயம் உள்ளிட்ட பல திருத்தங்களை மீனவர்களுக்கு எதிராக அரசு கொண்டு வருகிறது என்று மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதை எதிர்த்து மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, சீர்காழி, திருமுல்லைவாசல், பூம்புகார், மடவாமேடு, பழையார், கொட்டாய் மேடு, சந்திரபாடி உள்ளிட்ட 13 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 10,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்துகிறார்கள்.

