எடப்பாடி பழனிசாமி: அதிமுகவை வீழ்த்த சசிகலாவால் முடியாது
சேலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அணுக்கத் தோழியான சசிகலா எத்தனை பொய்யான தகவல்களைப் பரப்பினாலும் அதிமுகவை அவரால் வீழ்த்த முடியாது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக தொண்டர்களுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வரும் சசிகலா, அதிமுகவில் இருந்த போதும் கட்சி தோல்வியைச் சந்தித்து உள்ளதை சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
எம்ஜியாருக்கே அரசியல் ஆலோசனை வழங்கியதாக பல பொய்களை சசிகலா தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அகழாய்வில் 2,500 ஆண்டுகள் பழமையான வாள் கண்டெடுப்பு
பர்கூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மயிலாடும்பாறையில் நடத்தப்பட்ட அகழாய்வில் 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த 70 சென்டி மீட்டர் நீளம் உள்ள ஒரு வாளும் 50 சென்டி மீட்டர் அளவில் ஒரு மண்பானையும் கிடைத்தன.
இதனிடையே, மயிலாடும்பாறையில் சானரப்பன் மலையில் 30க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுவதாக அகழாய்வு இயக்குநர் சக்திவேல் தெரிவித்ததாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வேளையில், அகழாய்வில் கிடைத்த மண்பானை புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்ட தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, புறநானூறு பாடலை மேற்கோள் காட்டி, தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றியுள்ளார்.
கார் விபத்து: மூவர் பலி
திசையன்விளை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஒரு கார் சாலையில் கவிழ்ந்து நிகழ்ந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். இருவர் படு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்தனர். மதுபோதையில் காரை ஓட்டிச் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
பிளஸ்-2 தேர்வு: 100% தேர்ச்சி
சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிளஸ்-2 தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டார். பிளஸ்-2 மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். மதிப்பெண்ணில் மனநிறைவு இல்லாதவர்கள், செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு எழுதலாம் என அமைச்சர் கூறினார்.
கொரோனா காரணமாக மாணவர்களின் நலன் கருதி பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 50%, பிளஸ்-1 தேர்வில் 20%, பிளஸ்-2 மதிப்பெண் செய்முறை, உள்மதிப்பீடு அடிப்படையில் 30% என மொத்தம் 100%க்கு கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவன அதிகாரிகள்
34 பேர் இடமாற்றம்
சென்னை: சென்னை ஆவின் நிறுவனத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் 34 அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டனர். பணி நியமனம், பால் கொள் முதல் உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் இதன் தொடர்பில் பால் வளத்துறை அமைச்சர் நாசர் உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

