சென்னை: தமிழகத்தில் முகக்கவசம் அணியாத குற்றத்துக்காக கடந்த 101 நாள்களில் மட்டும் சுமார் 1.8 மில்லியன் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதே காலகட்டத்தில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காததற்காக 88,836 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் அவ்வப்போது பல ஊரடங்குத் தளர்வுகளும் அறிவிக்கப்படுகின்றன.
மேலும், முகக்கவசம் அணியாதவர்கள், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதியில் இருந்து இந்த நடவடிக்கை மேலும் தீவிரமடைந்தது. அன்று தொடங்கி நடப்பு ஜூலை மாதம் 17ஆம் தேதி வரையிலான 101 நாள்களில் ஆயிரக்கணக்கானோர் முகக்கவசம் அணியாமல் போலிசாரிடம் சிக்கியுள்ளனர். இதுவரை 1.8 மில்லியன் பேருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.
இதேபோல தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத 88,836 பேர் மீது வழக்குப் பதிவானது.
சிறு கடைக்காரர்கள், பொது இடங்களில் கூட்டமாக நின்றவர்கள் மீதுதான் அதிக எண்ணிக்கையில் வழக்குப் பதிவாகி உள்ளது.
இனி இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் தொடர்ந்து இத்தவறுகளைச் செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிசார் எச்சரித்துள்ளனர்.
சுகாதாரத்துறையும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

