சென்னை: தமிழகத்தில் 83,482 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் 49 தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இது தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.
மொத்தம் ரூ.28,508 கோடி முதலீட்டில் இந்த தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
'முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு' என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்கள் பலர் பங்கேற்றனர்.
தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.7,117 கோடி முதலீட்டில் 6,798 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஐந்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையத்தளத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இது இப்போதுள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில், வணிகம் செய்வதற்குத் தேவையான நூறு சேவைகள் இந்த இணையத்தளத்தில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

