செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
629c071b-bc7c-48b0-afd9-895607565f8a
-

நான்கு நாள்களுக்கு மிதமான மழை

சென்னை: ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யத் தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு சென்னையில் சுமார் மூன்று மணி நேரம் கனமழை நீடித்தது. இந்நிலையில், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழ் வளர்ச்சிக்கு என தனி அமைச்சு தேவை: கமல்ஹாசன் வலியுறுத்து

சென்னை: தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சு அமைக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மொழி, பண்பாட்டின் மீது தாக்குதல்களும் திணிப்புகளும் நிகழ்கிற காலகட்டத்தில் தனி அமைச்சு என்பது இன்னமும் முக்கியமானதாகிறது என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். "மொழி அரசியலை முன்வைத்து ஆட்சிக் கட்டிலைக் கைப்பற்றியவர்களுக்கு தமிழ் மொழியை அரியணை ஏற்றும் கடமையும் பொறுப்பும் உண்டு. தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டியதும் தமிழ் வளர்ச்சிக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கி தீவிரமாகப் பணியாற்ற வேண்டியதும் நம்முடைய வரலாற்றுக் கடமை," என கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.

அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் தமிழுக்கு முதலிடம்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள் ளது. வினாத்தாள், விடை- வினாத்தாள் அறிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழ் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

அமைச்சர் துரைமுருகன் மீது புகார்

சென்னை: அமைச்சர் துரைமுருகன் மீது வேலூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். சாதி வன்கொடுமை, நில அபகரிப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். சுப்பிரமணி அளித்துள்ள புகார் தொடர்பாக ஆகஸ்ட் 6ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நைஜீரிய ஆடவர் கைது: இரண்டு கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்

கோவை: டெல்லியில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த 26 வயதான எக்வின்ஸ் கிங்ஸ்லி என்ற ஆடவர் கைதாகியுள்ளார். போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சென்னை, மதுரையில் இருந்து அதிகாரிகள் கோவைக்கு வந்தனர். நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து கோவை வந்து சேர்ந்த ரயிலில் பயணம் மேற்கொண்ட அனைவரும் சோதனையிடப்பட்டனர். அப்போது கிங்ஸ்லி வைத்திருந்த பையில் 2.235 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.

தூத்துக்குடியில் இந்திய நீர்மூழ்கிக்கப்பல்

தூத்துக்குடி: இலங்கையில் உள்ள துறைமுகப் பகுதிகளில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்தியக் கடற்படையின் 'ஐஎன்எஸ் சிந்து சாஸ்த்ரா' என்ற நீர்மூழ்கிக் கப்பல் தூத்துக்குடி வந்து சேர்ந்தது. இக்கப்பல் பத்து நாள்கள் தூத்துக்குடியில் முகாமிட்டிருக்கும் என்றும், கடற்பகுதியில் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.