புதுடெல்லி: தமிழகத்தில் சுமார் 90 லட்சத்துக்கும் (9 மில்லியன்) அதிகமானோர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாக உள்ளதாக மத்திய சமூக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய அளவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் மதுவுக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு சுமார் 3.8 கோடி (38 மில்லியன்) பேருக்கு மதுப்பழக்கம் உள்ளது. இதேபோல், நாடு முழுவதும் சுமார் 15 கோடி (150 மில்லியன்) பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது என நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசின் சமூக நீதி அமைச்சு பதில் அளித்துள்ளது.
"தமிழகத்தில் சுமார் 100,004 பேர் அதிக போதைக்காக கஞ்சா பயன்படுத்துகிறார்கள். மேலும் 154,000 பேர் போதை மாத்திரகளை உட்கொள்கிறார்கள். மாநிலம் முழுவதும் சுமார் ஒன்பது மில்லியன் பேருக்கு மதுப்பழக்கம் தீவிர நிலையில் உள்ளது," என சமூக நீதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டில் மதுப்பழக்கம், கஞ்சா, போதை மாத்திரைக்கு எவ்வளவு பேர் அடிமையாக உள்ளனர் என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். தமிழகத்தில் மது உற்பத்தி ஆலைகளையும் மதுக்கடைகளையும் மூட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஊரடங்கின் போது கூட மதுக்கடைகளை திறக்க வேண்டுமா என்று கேள்வி எழுந்த நிலையில், இந்தப் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

