சென்னை: பிரபல பின்னணிப் பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை ஐந்து பேர் கைதாகி உள்ளனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த அப்பாடகி தென்னிந்திய மொழிகளில் பாடி வருகிறார். தற்போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் அவர், அவ்வப்போது பணி நிமித்தமாக வெளியே செல்ல வேண்டி இருப்பதால் சென்னையில் உள்ள தனது தங்கை வீட்டில் மகளை தங்க வைத்துள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக தனது சித்தி வீட்டில் தங்கியிருந்த அந்தச் சிறுமிக்கு அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதுகுறித்து தன் மகளிடம் விசாரித்துள்ளார் அந்தப் பாடகி.
அப்போது சித்தியின் கணவரும் அவரது உறவினர் ஒருவரும் தமக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சிறுமி கூறினார். மேலும் சித்தியும் இதற்கு உடந்தையாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் பாடகி கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், அவரது தங்கை குறிப்பிட்ட தேவாலயத்துக்கு அடிக்கடிச் சென்று வந்ததும் அங்குள்ள மதபோதகர் ஒருவர் தன் மகளிடம் அத்துமீறியதும் அவருக்குத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையில் அவர் புகார் அளித்ததன் பேரில் சிறுமியின் சித்தி, சித்தப்பா, உறவினர் மகன், மதபோதகர் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சிறுமியின் மாமன் முறையில் உள்ள ராஜேந்திரன் என்பவரும் இவ்வாறு மோசமாக நடந்து கொண்டது தெரியவந்தது. அவரும் இப்போது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

