செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
8449db21-530d-47e9-be89-ed1fbe431d39
-

36 மாவட்டங்களில் அதிக மழை

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் 36 மாவட்டங்களில் பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்துள்ளது. கோவை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டும் குறைவான மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் ஜூலை 19ஆம் தேதி வரை சராசரியாக 9.5 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருக்க வேண்டும் என்றும் நடப்பாண்டில் 16.6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. இது வழக்கத்தைவிட 75 விழுக்காடு அதிகமாகும்.

உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்: இளையர் கைது

சென்னை: துபாயில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் துபாயில் இருந்து விமானத்தில் சென்னை வந்தடைந்த அனைவரும் வழக்கமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது விழுப்புரத்தைச் சோ்ந்த சந்துரு சக்திவேல் (23 வயது) மீது சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்ததை அடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. அப்போது அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனா்.

சசிகலா பதில் அளிக்க அவகாசம்

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக சசிகலா தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, பதில் அளிக்குமாறு சசிகலா தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வழக்கு விசாரணையின்போது, பதில் மனுத்தாக்கல் செய்ய சசிகலா தரப்பில் அவகாசம் கோரப் பட்டது. இதையடுத்து ஜூலை 30ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்பட மாட்டாது: அமைச்சர் உறுதி

காஞ்சிபுரம்: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எந்தக் கார ணத்தை முன்னிட்டும் தள்ளி வைக்கப்பட மாட்டாது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். "தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை. அவ்வாறான தகவல்கள் சரியல்ல," என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் தெளிவுபடுத்தினார்.

மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்து

சென்னை: இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தியக் கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என பிரதமர் மோடிக்கு கடிதம் வழி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், மீனவர்களுக்கு எதிரான உட்பிரிவுகள் இருப்பதால், இது பரவலாக எதிர்ப்புகளையும் அமைதி இன்மையையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்த மசோதாவைக் கைவிட வேண்டும்," என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

ரூ.1.40 லட்சத்துக்கு ரூ.76 லட்சம் வட்டி

சேலம்: அம்மாபேட்டையைச் சேர்ந்த 54 வயதான கோதை என்ற ஆசிரியை கடந்த 2014ஆம் ஆண்டு விஷ்வ பிரியா என்பவரிடம் இரு தினங்களில் திருப்பித் தருவதாகக் கூறி ரூ.10,000 கடன் பெற்றார். அதற்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வட்டி வசூலித்துள்ளார் விஷ்வ பிரியா. சொன்னபடி பணத்தை திருப்ப முடியாத கோதை, அடுத்தடுத்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார். இதுவரை அவர் வாங்கிய கடன் ரூ.1.40 லட்சம் என்றும் அதற்காக சுமார் ரூ.76 லட்சம் வரை வட்டியாகக் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அசலையும் வட்டியையும் உடனடியாக திருப்பித்தருமாறு நெருக்கடி கொடுத்த விஷ்வ பிரியா, ஒரு கட்டத்தில் கோதையின் வீட்டுப் பத்திரத்தையும் பறித்துள்ளார். அது பின்னர் லோகநாதன் என்பவருக்கு கைமாற, போலி பத்திரங்கள் மூலம் அவர் வீட்டை தன் பெயருக்கு மாற்றியது அம்பலமானது. இப்போது அவர் தலைமறைவாகிவிட்டார்.