மதுரை: மதுரையில் பழங் காலத்து ஐந்து பைசாவை கொண்டு வருபவர்களுக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பு செய்த கடையை மூடி முத்திரை வைத்தனர் மதுரை மாநகராட்சி அதிகாரிகள்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால் மக்களிடம் பெரும் நிம்மதி நிலவுகிறது. மூன்றா வது அலையை எதிர்கொள்ளவும் அரசு தயாராக இருந்து வரும் நிலையில், மதுரை செல்லூர் பகுதியில் புதிதாக திறந்த பிரியாணிக் கடை ஒன்றில் மக்களை ஈர்க்கும் வகையில் 5 பைசாவுக்கு பிரியாணி வழங்குவதாக விளம்பரம் செய்துள்ளனர்.
இதனால், சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் பலரும் பழைய 5 பைசாவுடன் பிரியாணி வாங்கு வதற்காக காலை முதல் நீண்ட வரிசையில் குவிந்தனர். பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை. சமூக விலகலையும் பின்பற்றவில்லை. இந்நிலையில், உரிய கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் பொதுமக்களுக்கு பிரியாணி விற்பனை செய்ததால் மதுரை மாநகராட்சி அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பிரியாணிக் கடை மூடப்பட்டது.

