நீண்ட நாள் விடுப்பு கிடைக்காது
வேலூர்: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி தம்பதிக்கு நீண்ட விடுப்பு அளிக்க தமிழக அரசால் முடியாது என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
வேலூர் சிறையைப் பார்வையிட்ட அமைச்சர் ரகுபதியிடம் முருகனும் நளினியும் தங்களுக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்கும்படி கோரியதற்கு, "அரசால் அதிகபட்சமாக 30 நாள் கள் மட்டுமே விடுப்பு அளிக்கமுடியும். அதற்கும் மேல் கூடுதலாக 30 நாள்கள் வழங்கலாம். ஆனால், நீண்ட விடுப்பு வேண்டும் என்றால் நீங்கள் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும்," என்று கூறினார்.
விஜய் சொகுசு கார் வழக்கு விவகாரம்;
விசாரணைப் பட்டியலில் சேர்க்க உத்தரவு
சென்னை: சொகுசு காருக்கு வரி விலக்கு அளிக்கும்படி விஜய் தொடர்ந்த வழக்கு தொடர்பில், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்தும் தன்னைப் பற்றிய விமர்சனத்தை எதிர்த்தும் நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதியின் தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்கவேண்டும் என்ற நடிகர் விஜய்யின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்படி தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல் விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இவ்வழக்கு திங்களன்று விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மாவட்டங்களில் அதிக கவனம்
கோவை: தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக தென் மாவட்டங்களில் தொழில்நுட்பப் பூங்காங்கள் அமைக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் இதன்மூலம் இளையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப் படும் எனவும் கோவை விளாங்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

