தருமபுரி: தென்மேற்குப் பருவமழை கடந்த சில தினங்களாக தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தை ஒட்டிய கர்நாடக, கேரள எல்லைப்பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக கர்நாடகாவில் கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கடந்த மாதம் முதல் கட்டமாக 12,000 கன அடி நீரும் கடந்த 15ஆம் தேதி 21,000 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 3ஆம் கட்டமாக வியாழக்கிழமை 37,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. அந்த நீர் நேற்று தமிழக எல்லையான தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
கடந்த மூன்று நாட்களாக 7,000 கன அடி நீர் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது 17,000 கன அடி நீர் வருகிறது. இதையடுத்து ஒகேனக்கலில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ள நீர் இன்று காலை மேட்டூர் அணையைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

