சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் நேற்றுக் காலை திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷாவை அவர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்த இந்தத் தகவல் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசியல் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வரும் வேளையில் ஓ பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இன்று டெல்லியில் அமித் ஷாவைத் தவிர பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை கடந்த சில வாரங்களுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போதே அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஓபிஎஸ் மகன் ஓ. பி. ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இருப்பினும், மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சசிகலாவின் குரல் ஒலிப்பதிவு தொடர்பான அரசியல் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
தற்போது சசிகலா அதிமுகவை கைப்பற்றுவதற்கான காய்களை நகர்த்தி வருகிறார். அதிமுக தொண்டர்களுடன் அவர் பேசும் ஒலிப்புதிவுகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகிய ஒலிப்பதிவுக்கூட ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரை அரவணைத்துச் செல்லவே விரும்பியதாக சசிகலா பேசியிருந்தார். சசிகலாவின் அரசியல் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஓபிஎஸ் ஆேலாசிக்கலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிப்பதாக தமிழக ஊடகம் ஒன்று குறிப்பிட்டது.

