செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
89bb5e50-ca49-446b-ad7b-dec7866465d5
-

தனியார் மருத்துவமனை: இலவச தடுப்பூசி

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைத்து வயதினருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல், இனிமேல் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முன்மாதிரி முயற்சியாக அமைய உள்ள இத்திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை 28ஆம் தேதி ஆழ்வார்பேட்டை காவிரி மருத்துவ மனையில் தொடங்கி வைப்பார் என்றும் அதன்பின்னர் தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

ஓட்டுநர்களிடம் கைபேசி பயன்பாடு கூடாது

சென்னை: தமிழகத்தில் சாலை விபத்துகளும் சாலை மரணங்களும் 50% அளவுக்குக் குறைந்துள்ளது குறித்து அண்ைமயில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி பாராட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில், விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க, பணியில் இருக்கும் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பின்பற்றவேண்டிய வழிமுறைகளைத் தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர்கள் கவனம் சிதறாமல் பேருந்துகளை ஓட்டுவதில் கவனம் செலுத்தவேண்டுமே தவிர கைபேசி பயன்படுத்தக் கூடாது. ஓட்டுநர்கள் தங்களது கைபேசிகளை நடத்துநர்களிடம் வழங்கவேண்டும் என்றும் மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1,500 கழிவறைகளை அமைக்கத் திட்டம்

சென்னை: 'நம்ம டாய்லெட்' என்ற பெயரில் நவீன வசதிகள் கொண்ட 1,500 'ஸ்மார்ட்' கழிவறைகளை பொது இடங்களில் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்து உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை முதல் கட்டமாக, ஈசிஆர், ஓஎம்ஆர், மத்திய சென்னை பகுதிகளில் சோதனை முயற்சியாக 'ஸ்மார்ட்' கழிவறைகளை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும் இந்தக் கழிவறைகள் வடிவமைக்கப்பட உள்ளன.

நடிகை யாஷிகாவின் ஓட்டுநர் உரிமம் ரத்து

சென்னை: சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் மகாபலிபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த், அவரது தோழி, இரண்டு நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து, யாஷிகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். அத்துடன், அவரது ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர். காரை நடிகை யாஷிகாதான் அதிவேகமாக ஓட்டினார் என்றும் இதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் வழக்குப் பதிவாகி உள்ளது. விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் அவரது நண்பர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் யாஷிகாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறியதாக யாஷிகாவின் தந்தை கூறியுள்ளார்.

ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கு அரசுப் பணி

சேலம்: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைெபறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனைகள் தனலட்சுமி, சுபா வெங்கடேசன் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் அரசுப் பணி வழங்க உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் நான்கு இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட்டு, அனைத்துலக அளவில் தமிழக வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

ஐந்து கோயில்களில் ரோப்கார் வசதி

சென்னை: தமிழ்நாட்டில் திருத்தணி, சோளிங்கர், திருக்கழுக்குன்றம், திருச்சி, திருச்செங்கோடு ஆகிய ஐந்து மலைக்கோயில்களில் விரைவில் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.