2,000 கிலோ கோவில் தங்க நகையை ஆக்கபூர்வமாக பயன்படுத்த திட்டம்
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் பணமாக மட்டுமின்றி தங்கம், வெள்ளி நகைகளாகவும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தி வருகின்றனர். இதுபோல் தமிழகக் கோயில்களில் ஏறக்குறைய 2,000 கிலோ தங்க நகைகள் சேர்ந்து உள்ளதாகவும் அவற்றை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்த 2,000 கிலோ தங்க நகைகளையும் வங்கியில் 'டெபாசிட்' செய்து அவற்றின் மூலம் கிடைக்கும் வட்டித்தொகையைக் கொண்டு கோயில்களை சீரமைக்க உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இந்த திட்டத்தைப் பலரும் பாராட்டி உள்ளனர்.
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மாதந்தோறும் பொருள்கள் விநியோகம்
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நியாயவிலைக் கடைக்கு திடீரென்று சென்ற கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அங்கு மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், "தமிழகத்தில் காலியாக உள்ள நியாய விலைக் கடை ஊழியர்களுக்கான அனைத்துக் காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்பட்டு, 'ரேஷன்' கடைகளில் மாதம் 30 நாள்களும் பொதுமக்களுக்குப் பொருட்கள் விநியோகிக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.
திமுகவுடன் கைகோத்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கடந்த 12ஆம் தேதியன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, அரசியலில் ஈடுபடும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இப்போது மகளிர், வர்த்தகர், வழக்கறிஞர், இளைஞர் உள்ளிட்ட அணிகளைச் சேர்ந்த செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தனர்.
ரூபாய் 4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் கடத்திய இருவர் கைது
ராமநாதபுரம்: வீட்டு உபயோகப் பொருட்களுக்குள் மறைத்து கடத்தி வந்த 4.03 கோடி ரூபாய் மதிப்பிலான 8.17 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பயணிகள் இருவரையும் கைது செய்தனர். துபாயில் இருந்து சென்னை அைனத்துலக விமான நிலையத்திற்கு 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' சிறப்பு விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது. அந்த விமானத்தில் வந்த 104 பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக்கொண்டிருந்தனா். அப்போது சென்னை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த இரு பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவா்களது உடைமைகளைச் சோதனையிட்டனர். அவர்களது பெட்டியில் இருந்த மின்சார குக்கர், மிக்சி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை கழற்றி சோதனை செய்ததில் தங்கத் தகடுகள், வளையங்கள், உருளைகளில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. துபாயில் உள்ள இருவர் உறவினர்களிடம் கொடுக்குமாறு வீட்டு உபயோகப் பொருட்களைக் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.

