திருவள்ளூர்: அரசு மருத்துவ மனையில் பிரசவமான பெண்ணின் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத ஊசியைப் போட்டதால் அவர் உயிரிழந்ததாகவும் தாதியின் கவனக்குறைவே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்றும் பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் அளித்த தவறான சிகிச்சையே அண்மையில் பிரசவமான பெண் வினிதாவின் இறப்புக்கு காரணம் என அவரது உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.
அத்துடன், வினிதா வேண்டாம் என்று கூறிய ஊசியை எதற்காக போடவேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவரது உறவினர்கள், இதுகுறித்து உரிய முறையில் விசாரிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி வினிதா. இந்த தம்பதிக்கு ஏற்கெனவே ஐந்து வயது பெண் குழந்தை உள்ள நிலையில், வினிதா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தார்.
இதனால் கடந்த 20ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கடந்த 22ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு வினிதா வீட்டிற்குச் செல்ல தயாரான நிலையில் அவருக்கு தாதி ஒருவர் கட்டாயப்படுத்தி ஊசி ஒன்றைப் போட்டதாகத் தெரிகிறது.
ஊசி போட்ட சில நிமிடங்களில் மருத்துவமனையிலேயே மயக்கம் அடைந்த வினிதா ஆபத்தான நிலைக்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து அவரை அங்கிருந்து சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் நேற்று முன்தினம் மதியம் வினிதா உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

