சென்னை: செந்தில் பாலாஜி (படம்) தமிழக மின்சாரத் துறை அமைச்சர் என்பதற்காக விசாரணைக்கு முன்னிலையாவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க முடியாது என சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"சட்டத்தின்முன் அனைவரும் சமம்தான். அமைச்சர் என்பதால் நேரில் முன்னிலையாக விலக்கு அளிக்கவோ, சலுகை வழங்கவோ முடியாது. நிச்சயம் ஆகஸ்ட் 6ஆம் தேதி அவர் நேரில் முன்னிலையாக வேண்டும்,"
என நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினர்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தனது துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் இவர் மீது புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, எம்எல்ஏ, எம்.பி.க்கள் மீதான வழக்கு விசாரணை நடைபெறும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது திமுகவில் மின்சாரத் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, தனக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாக விலக்களிக்கும்படி பலமுறை கோரியுள்ளதுடன், நீதிமன்றத்தில் முன்னிலையாகாமலும் இருந்து வருகிறார்.

