லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பழுதாகி நின்றுகொண்டிருந்த பேருந்து மீது கனரக வாகனம் ஒன்று அசுர வேகத்தில் வந்து மோதியதில், பேருந்தின் முன்புறம் சாலையில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்த 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிர்ச்சியூட்டும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் உதவி நிதி வழங்கப்படும் எனவும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
உ.பி. மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ராம் சனேஹி காட் பகுதியில் நடந்த விபத்தில், படுகாயம் அடைந்த 19 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து உ.பி. போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ள தகவலில், "உ.பி.யின் லக்னோ-அயோத்யா தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
"பீகார் மாநிலத் தொழிலாளர்கள் பயணம் வந்த பேருந்தில் பழுது ஏற்பட்டதை அடுத்து பேருந்து சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளது.
"நள்ளிரவு நேரம் என்பதால் பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் பேருந்தின் முன்புறம் சாலையில் படுத்துத் தூங்கி உள்ளனர்.
"அதன்பின்னர் அதிகாலை 1.30 மணியளவில் வேகமாக வந்த சரக்கு லாரி பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் பேருந்தின் முன்பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த பீகார் தொழிலாளர்கள் 18 பேர் உயிரிழந்தனர்.
"இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்களில் ஒரு சிலரது உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கூறப்படுவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.