செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
1bbf112d-c5e0-49d2-a631-fd34dc491676
-

மேலும் 1,767 பேருக்கு கிருமி பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,767 பேர் கொவிட்-19 கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மேலும் 29 பேர் சிகிச்சை பலன் தராமல் உயிரிழந்ததாகவும் தகவல்கள் ெதரிவித்துள்ளன. மாநிலத்தில் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,966ஆக அதிகரித்துள்ளது. 22,188 பேர் தற்போது தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருமி பாதிப்பிலிருந்து 2,312 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் 139 பேருக்கும் சேலத்தில் 169 பேருக்கும் ஈரோட்டில் 132 பேருக்கும் கிருமி பாதிப்பு உறுதியாகி உள்ளது என சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் கூறியுள்ளது.

தனியார் மருத்துவமனைகளிலும் இலவசத் தடுப்பூசி

சென்னை: இதுவரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இலவசமாகத் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இனி இலவசமாக கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின், இந்த இலவச தடுப்பூசி திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். அதேசமயம், தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையின்கீழ் கோவிஷீல்ட் தடுப்பூசி 780 ரூபாய்க்கும் கோவாக்சின் தடுப்பூசி 1,410 ரூபாய்க்கும் போடும் நடைமுறை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

'அதிமுகவை கைப்பற்றுவதே இலக்கு'

திருச்சி: அதிமுகவை மீட்கவேண்டும் என்பதே தனது இலக்காகவும் சசிகலாவின் இலக்காகவும் உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "அதிமுகவைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே இலக்கு. எனது முயற்சியும் சசிகலாவின் முயற்சியும் அதுதான். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி தோல்வியைக் கடந்து எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் பயணம் செய்து வருகிறோம்," என்று சொன்னார்.

44.61 கோடி பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை 44.61 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குஜராத்தில் சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் விவசாயி ஒருவருக்கு அவரது நிலத்தில் வைத்து கோவிஷீல்ட் தடுப்பூசியைப் போடுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்