சென்னை: தனது சேவையைப் பாராட்டும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள 'தகைசால் தமிழர்' விருதினை ஏற்றுக்கொள்வதாகவும் விருதிற்காக அளிக்கப்படும் ரூ.10 லட்சம் தொகையை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா (படம்) தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கும் தமிழினத்துக்கும் பெரும் பங்காற்றியவர்களுக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, இவ்விருதுக்காக மூத்த தலைவர் என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு ரூ.10 லட்சம் காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் என்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், "சுரண்டலற்ற பொதுவுடைமைச் சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக்கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியைத் தொடர்ந்து நிறைவேற்றுவேன்," என்று சங்கரய்யா கூறியுள்ளார்.

