செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
7449ff33-5169-4e16-be41-110ccf8a6ced
-

மீண்டும் 'தமிழ் வாழ்க' பதாகை

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பத்தாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சி அமைத்து உள்ள திமுக, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் வண்ண விளக்குகள் அலங்காரத்துடன் 'தமிழ் வாழ்க' என்ற எழுத்துப் பலகையை மீண்டும் நிறுவியுள்ளது. ஏற்கெனவே சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டடத்திலும் இதேபோன்ற பலகையை வைத்துள்ளனர். தலைமைச் செயலகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வண்ண விளக்குகளுடன் ஒளிர்ந்த 'தமிழ் வாழ்க' பதாகை, அதன்பின்னர் கடந்த சில ஆண்டுகளாக அகற்றப்பட்டது.

'ஊழல் குறித்து விவாதிக்கத் தயார்'

மதுரை: அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறையில் நடைபெற்றுள்ள ஊழல்கள் குறித்து நேரடியாக விவாதிக்கத் தயாரா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சவால் விடுத்துள்ளார். மதுரையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எதையும் பயனுள்ள வழியில் செய்யாத அதிமுகவினர் 100 நாள் திமுக ஆட்சியைக் குறை கூறுவதாகவும் சொன்னார்.

சிறப்பாக பாடம் நடத்தினால் விருது

சென்னை: கல்வித் தொலைக்காட்சியில் சிறப்பான முறையில் மாணவர்களுக்கு நன்கு புரியும் வகையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிருமிப் பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதை அடுத்து, இணையம் மூலமாகவும் கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அணை விவகாரத்தில் பாஜக துணை

நாகர்கோவில்: மேகதாது அணை விவகாரத்தில் மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு தமிழக பாஜக துணை நிற்கும், தமிழக மக்களின் நலனை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திமுகவின் தேர்தல் அறிக்கையில், தங்களது ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதிபரின் ஒப்புதலைப் பெற்று ரத்து செய்தால் பாஜக எதிர்க்கப் போவதில்லை என்றார்.

சிபிசிஐடி போலிசார் பதிலளிக்க உத்தரவு

சென்னை: நடிகர் ஆர்யாவுக்கு எதிரான மோசடி புகார் எந்த நிலையில் சென்றுகொண்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி சிபிசிஐடி போலிசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.70 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக நடிகர் ஆர்யாவுக்கு எதிராக ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து, ராஜபாண்டியன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெர்மனி பெண்ணிடம் ரூ.70 லட்சம் பணத்தைப் பெற்ற பிறகு ஆர்யா வேறு பெண்ணைத் திருமணம் செய்தார். தான் கொடுத்த பணத்தைப் பெண் திருப்பிக் கேட்டபோது, "திருமணம் செய்த பெண்ணை விவாகரத்து செய்து விட்டு, உன்னைத் திருமணம் செய்துகொள்கிேறன் என்று வாக்குறுதி அளித்து ஏமாற்றினார்," எனக் கூறப்பட்டுள்ளது. நீதிபதி நிர்மல்குமார் விசாரணையை ஆகஸ்ட் 17ஆம் ேததிக்கு ஒத்தி வைத்தார்.