செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b8c6fd15-eef3-4fc9-a66d-30781541ef89
-

அரசுப் பள்ளிகளின் தரம் உயரும்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரியின் மூலம் 8,000 ஏக்கர் விளைநிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஏரியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், "ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக் கூடங்களைத் திறப்பது குறித்து முதல்வர் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார். இன்னும் ஈராண்டுகளில் அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்படும். அரசுப் பள்ளிகளில் சேர மற்றவர்களின் பரிந்துரையை நாடும் சூழலும் ஏற்படலாம். சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை கற்றுத்தரவும் யோசனை உள்ளது," என்றார்.

தமிழக பாஜக உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை: மேகதாது அணையைக் கட்டாமல் விடமாட்டோம் என்று விடாப்பிடியாக இருந்து வரும் கர்நாடக அரசைக் கண்டித்து, தஞ்சாவூரில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணையைக் கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகாவின் புதிய முதல்வர் பசுவராஜ் பொம்மை செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "பிரதமர் மோடியிடம் அனுமதி பெற்று மேகதாதுவில் அணை கட்டும் பணிகள் தொடங்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை,'' என்று உறுதிபட கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்கள் சேவை கிராமத்தில் தேவை

சென்னை: அனைத்து மருத்துவர்களும் நகரங்களில் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் சில ஆண்டுகள் மருத்துவச் சேவையாற்ற முன்வர வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு மருத்துவ மன்றம் சார்பில் சிறப்பாகப் பணியாற்றிய 31 மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்த ஆளுநர், தொடர்ந்து பேசியபோது, "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்," என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப மருத்துவர்களும் தமிழக அரசும் செயல்பட்டு வருவதாகவும் தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

வாய்க்கால்களை காணவில்லை என புகார்

திண்டுக்கல்: எங்கள் பகுதியில் காணாமல் போன வாய்க்கால்களைக் கண்டுபிடித்து தரவேண்டும் என விவசாயிகள் சிலர் திரளாக வந்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளனர்.

அதில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கிரியம்பட்டியில், குடகனாற்றுக்கு குறுக்கே உள்ள வெங்கட்டராமன் அய்யங்கார் அணைக்கட்டில் இருந்து செல்லும் பாசன வாய்க்கால், லட்சுமணம்பட்டி அணைக்கட்டில் இருந்து செல்லும் பாசன வாய்க்கால்கள் உள்ளிட்டவை ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய்விட்டன. இதுகுறித்து பொதுப் பணித்துறை, நீர்வள ஆதாரத் துறையினரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, காணாமல் போன வாய்க்கால்களை போலிசார்தான் கண்டுபிடித்து தரவேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.