கேரளாவில் பாதிப்பு உச்சத்தை அடையும் என நிபுணர்கள் எச்சரிக்கை
புதுடெல்லி: நாடு முழுவதும் பத்து மாநிலங்களில் உள்ள 46 மாவட்டங்களில் தொற்று விகிதம் பத்து விழுக்காட்டுக்கும் அதிகமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், 53 மாவட்டங்களில் தொற்று விகிதம் ஐந்து முதல் பத்து விழுக்காட்டுக்குள் இருப்பதாகவும் மிக விரைவில் இவையும் பத்து விழுக்காட்டைக் கடந்துவிடும் ஆபத்து உள்ளதாகவும் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என அந்த அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஒடிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரா, மணிப்பூர் ஆகியவையே அந்த பத்து மாநிலங்கள் ஆகும்.
தொற்றுப்பரவல் விகிதத்தைக் குறைக்க இப்போதே நடவடிக்கை எடுக்காவிடில் விளைவுகள் மோசமாகிவிடும் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இதற்கிடையே, கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகாவிலும் கொரோனா கிருமித்தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிஉள்ளது.
கேரளாவில் தற்போது நாள்தோறும் புதிதாக சுமார் 20 ஆயிரம் பேருக்கு கிருமி தொற்றி வருகிறது. அங்கு தடுப்பூசி போடும் பணி விரிவுபடுத்தப்படும் நிலையில், மகாராஷ்டிராவிலும் கர்நாடகாவிலும் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், கேரளாவில் தொற்றுப் பாதிப்பு மிக விரைவில் உச்சத்தை அடையும் எனவும் எச்சரித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ள போதிலும், எதிர்பார்த்த அளவு தொற்று பாதிப்பு குறையவில்லை. அங்கு தினந்தோறும் சராசரியாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின்றன.
வெள்ளிக்கிழமை 6,600 பேருக்கு புதிதாக கிருமி தொற்றி உள்ளது. மேலும், 231 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132,566ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, கர்நாடகாவில் மீண்டும் புது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகக் கூறப்படுகிறது.
அங்கு கடந்த சில வாரங்களாக தொற்றுப்பரவல் கட்டுக்குள் இருந்தது. தினமும் 2 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வந்த அன்றாட எண்ணிக்கை, வெள்ளிக்கிழமை அன்று அதைக் கடந்து பதிவானது. 34 பேர் தொற்றுக்கு பலியாகிவிட்டனர். கேரளாவில் கடந்த பத்து நாள்களில் மட்டும் 1.5 மில்லியன் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கேரளாவில் தற்போதுள்ள பாதிப்பை விட மேலும் 50 விழுக்காட்டினர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே தடுப்பூசி போடுவதை மேலும் அதிகரிக்க அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் அடுத்து வரும் மூன்று வார காலம் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆந்திராவிலும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. எனினும், அங்கு ஊரடங்கு தளர்வுகளின் ஓர் அங்கமாக மூன்று மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த வரும் 14ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் நூறு விழுக்காடு பார்வையாளர்களுடன் இன்று முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

