விவசாயிகள் இறப்பு குறித்து விசாரணை: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
புதுடெல்லி: கடந்த பல மாதங்களாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தின்போது விவசாயிகள் பலர் இறந்தது குறித்து மத்திய அரசுக்கு எதுவும் தெரியாது என மத்திய வேளாண் அமைச்சர் கூறியிருப்பது தங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தி உள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. மேலும், டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் இறப்பு குறித்த விவரங்களை அறிய நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
மேகதாது திட்டத்துக்கு விரைவாக அனுமதி அளிக்கக் கோரிய பசவராஜ்
பெங்களூரு: மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்கக் கோரி மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் கடிதம் வழங்கி இருப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதே கோரிக்கையை பிரதமர் மோடியிடமும் தாம் முன்வைத்துள்ளதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். "மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு ஏற்கெனவே மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. அந்த திட்ட அறிக்கை காவிரி நிர்வாக வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு கவனம் செலுத்தி விரைவாக அனுமதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தேன்," என்று முதல்வர் பசவராஜ் பொம்மை மேலும் கூறியுள்ளார்.
இமாச்சலப் பிரதேச முதல்வருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்
சிம்லா: சுதந்திர தினத்தன்று இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்க மாட்டோம் என காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக அம்மாநிலத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் சிலருக்கு பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், "பஞ்சாப் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே முன்பு இமாச்சலப் பிரதேசம் இருந்ததாகவும் பஞ்சாப்பை முதலில் விடுவித்துவிட்டு, பின்னர் இமாச்சலப் பிரதேசத்தையும் கைப்பற்றுவோம்," என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு ஆலை விபத்து: ஒருவர் பலி
விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 60 வயது ஆடவர் உயிரிழந்த சம்பவம் சிவகாசியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று காலை இந்த ஆலையில் உள்ள எட்டு பட்டாசு தயாரிக்கும் அறைகளில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து கலவை அறையில் உராய்வு காரணமாக தீப்பற்றியது. அது மற்ற அறைகளுக்கும் பரவியதில் வெடிபொருள்கள் வெடித்துச் சிதறின. இதில் சிவகாசியைச் சேர்ந்த ஆனந்தராஜ் உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலிசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

