புதுடெல்லி: இருநாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
எல்லைப் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா பகுதிகளில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, புதிய கட்டுமானப் பணிகளைக் கைவிடுவது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு இருதரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. எல்லையில் உள்ள அசல் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே உள்ள மால்டோ பகுதியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும்.
இந்நிலையில், சீனா, பாகிஸ்தான் இடையே வர்த்தகப் பாதை அமைக்க இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் அமைக்க திட்டமிட்டுள்ள அக்குறிப்பிட்ட பாதையானது, இந்திய பகுதிக்குள் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், சீனாவின் வெளியுறவு அமைச்சர்கள் அண்மையில் சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இரு நாடுகளுக்கிடையே வர்த்தகப் பாதை அமைப்பது என முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாடு தலையிடுவதை இந்தியா அனுமதிக்காது என்று மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
சீனா, பாகிஸ்தான் இடையேயான வர்த்தகப் பாதைக்காக அவர்கள் அறிவித்திருக்கும் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"அக்குறிப்பிட்ட பகுதியை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இதை சீனாவிடம் முன்பே தெரிவித்துள்ளோம். எனவே, இந்தத் திட்டத்தை இந்தியா அனுமதிக்காது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்படும் தேர்தலையும் இந்தியா நிராகரிக்கும்," என்றார் அரிந்தம் பாக்சி.

