சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் மோகம் தணிந்து அரசாங்கப் பள்ளிகளுக்கான தேவை அதிகரிக்கிறது என்றும் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் இருந்து 200,000 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளதாகவும் அந்த மாநிலத்தின் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்கள் எழுதிய 100 புத்தகங்களை வெளியிடும் விழா தலைமைச் செயலகத்தில் நடந்தது.
'எழுதுக' என்ற தலைப்பில் நடந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர், மாணவர்கள் அரசாங்கப் பள்ளிக்கூடத்தை நாடிவரும் போக்கு அதிகமாகி வருவதாகத் தெரிவித்தார். மாநிலத்தில் தனியார் பள்ளிகள் அதிக கட்டணத்தை வசூல் செய்வது ஆதாரங்களுடன் தெரியவந்தால் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
இருந்தாலும் தவறு செய்யும் தனியார் பள்ளிகளைத் திருத்தவே தாங்கள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு கல்வியிலும் புறப்பாடத் திட்ட நடவடிக்கைகளிலும் இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவில் இதுவரை எட்டாம் வகுப்பு மாணவர் மட்டுமே சொந்தமாக புத்தகம் ஒன்றை எழுதி இருப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால் தமிழ்நாடு அவருடைய சாதனையை முறியடித்து இருக்கிறது என்றும் கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி ஒருவர் தானே ஒரு புத்தகத்தை எழுதி சாதனை படைத்து இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் கொவிட்-19 சூழ்நிலையில் அவர்கள் கல்வி கற்பதை சாத்தியமாக்கவும் அதிநவீன முயற்சிகள் பலவும் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், கல்வி போதனைக்காகவே அரசாங்கம் தொலைக்காட்சி ஒளிவழிகளைத் தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.
இணையம் வழி கற்றலைத் தொடர்ந்து அரசாங்கம் மேம்படுத்தி வரும் என்றும் மாநிலத்தில் பள்ளிக்கூடங்களை கூடியவிரைவில் திறக்க உரிய நேரத்தில் பொருத்தமான முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மாநிலத்தில் பள்ளிக்கூடங்களைத் திறப்பதன் தொடர்பில் இப்போது மருத்துவ வல்லுநர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டி இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் முதலில் பள்ளி களைத் திறப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, முன்னாள் அதிபர் அப்துல்கலாமின் பேரன் ஷேக் தாவூத் முதலானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


