திருவனந்தபுரம்: கேரளா உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வரும் தங்கக்கடத்தல் மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைப்பதாகவும் இந்தப் பணம் தேச விரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றும் கேரள சுங்க இலாகா ஆணையராக இருந்த சுமித்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கு டாலர் கடத்தியதில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளதாக அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் உள்ள ஐக்கிய அமீரக சிற்றரசின் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி அம்மாநிலத்துக்குள் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர் சொப்னா உட்பட பலர் கைதாகி உள்ளனர்.
தவிர, கேரளாவில் இருந்து முதல்வர் பினராயி விஜயனின் தூண்டுதல் காரணமாக வெளி நாடுகளுக்கு டாலர் கடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கேரள சுங்க இலாகா ஆணையாளர் சுமித்குமார் மும்பைக்கு மாற்றப்பட்டு உள்ளார். இதையடுத்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாலர் கடத்தலுக்கு கேரளாவின் நடப்பு முதல்வர், சபாநாயகர் ஆகிய இருவரது தூண்டுதலும்தான் முக்கிய காரணம் என்றார். சொப்னா தலைமையிலான கடத்தல் கும்பல் தங்கம், டாலர் கடத்தல் மூலம் கோடிக்கணக்கில் பணம் திரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"கேரளாவில் நான் பணிபுரிந்த காலத்தில் கேரளா, லட்சத்தீவு வழியாக கடத்தப்பட்ட பெருமளவு பல கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை சுமார் ஒரு டன் கடத்தல் தங்கம் சிக்கி உள்ளது," என்றார் சுமித்குமார்.
கடத்தலில் முதல்வர் பினராயி விஜயனுக்கு உள்ள தொடர்பு குறித்து சொப்னா வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அவர் கருதுவதாகவும் ஊடகத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

