புதுடெல்லி: தொலைபேசி ஒட்டுக்கேட்பு (பெகாசஸ்) விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தும் வரை போராட்டம் நீடிக்கும் என எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
ஆனால் மத்திய அரசு இந்தக் கோரிக்கையை ஏற்காமல் பிடிவாதமாகவும், ஆணவத்துடனும் நடந்து கொள்வதாக அக்கட்சிகள் சாடி உள்ளன.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்பது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால் உள்துறை அமைச்சர் அவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் அதற்கேற்ப இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறின.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில், புதிய வேளாண் சட்டங்கள், விலைவாசி ஏற்றம் ஆகியவை குறித்தும் விவாதிப்பது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஓரணியில் நிற்கும் எதிர்க்கட்சிகளைக் கேவலப்படுத்த தவறான பிரசாரத்தை மத்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
14 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 18 தலைவர்கள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த 12 நாள்களாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பான அவை நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக முடங்கி உள்ளன. இதையடுத்து பிரதமர் மோடி அக்கட்சிகளை சாடியுள்ளார்.
"ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதை கவனத்தில் கொள்ளாமல் எதிர்க்கட்சிகள்தான் பிடிவாதப் போக்குடன் செயல்படுகின்றன. இதனால் நாடாளுமன்ற அலுவல் நேரம் முற்றிலுமாக வீணாகிறது என்று பாஜக சாடியுள்ளது.
ஆனால் மத்திய அரசின் பிடிவாதப் போக்கே இதற்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்துள்ளன.
மேலும் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு எதிராக ஓரணியில் நிற்பது எனவும் அக்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

