சென்னை: தமிழகத்தின் எந்தப் பகுதியில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தாலும் அவை நிச்சயமாக மீட்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில்களின் வரவு, செலவுக் கணக்குகளை இனி இணையம் வழி பொதுமக்கள் பார்வையிட முடியும் என்றார்.
"கோவில்களின் நில ஆக்கிரமிப்புகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மீட்கப்படும் நிலங்கள் அறம் வளர்க்கும் பணிக்காக பயன்படுத்தப்படும். மேலும், திருக்கோவில்களின் வருவாயை பெருக்கவும் திட்டம் வகுக்கப்படும்.
"அடுத்த ஒரு வாரத்துக்குள் அனைத்து கோவில்களின் வரவு, செலவுக் கணக்கு விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்," என்றார் அமைச்சர் சேகர் பாபு.
கோவில்களைக் கொள்ளையடிக்கும் ஒருசில கும்பலைச் சேர்ந்தவர்கள் நிலப் பட்டாக்களைக் கூட பெயர் மாற்றம் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்த நிலங்களும் நிச்சயம் மீட்கப்படும் என்றார். சென்னையில் உள்ள கோவிலுக்குச் சொந்தமான 142 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அறநிலையத் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

