சென்னை: பாடநூல்களில் இடம் பெற்றிருக்கும் தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதிக்கான அடையாளத்தை நீக்குவது என்பது புரிதல் இல்லாத செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதேசமயம் சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள 12ஆம் வகுப்புக்கான பொதுத்தமிழ் பாடநூலில் வரலாற்றிலும் இடம் பெற்றிருக்கும் தமிழறிஞர்கள் பலரின் பெயர்களில் இருந்து சாதியை குறிக்கும் பகுதி மட்டும் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இத்தகைய நடவடிக்கைகள் சாதிக்கு பதிலாக சான்றோர்களின் அடையாளத்தை தான் அழிக்கும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
உ.வே.சாமிநாத அய்யர் என்பதில் இருந்து உ.வே.சாமிநாதர் என்று மாற்றப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
"வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யரின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, முதல் தமிழ் நாவலை எழுதிய மாயவரம் வேதநாயகம் பிள்ளை, 'தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா' என்று தமிழரின் தன்மானத்தை உலகிற்கு உணர்த்திய நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை, இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும் சமூகப் போராளியுமான முத்துலட்சுமி ரெட்டி, இலங்கை தமிழ் அறிஞர் சி.டபிள்யூ. தாமோதரம் பிள்ளை உள்ளிட்ட தலைவர்கள், தமிழறிஞர்களின் பெயர்களின் பின்னால் உள்ள சாதிப் பெயர்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் தேசிகர், தீக்ஷிதர் போன்ற சாதி பெயர்கள் தமிழ் பாடநூலில் இருந்து நீக்கப்படவில்லை," என ராமதாஸ் பட்டியலிட்டுள்ளார்.
தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்களின் பெயருக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டதற்கு காரணம் சாதி ஒழிப்பாக தான் இருக்க வேண்டும் என்று யூகிக்க முடிவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து மக்களிடமும் சமத்துவத்தை ஏற்படுத்துவதன் மூலம் தான் சாதியை ஒழிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
அதை விடுத்து பாடநூல்களில் இடம் பெற்றிருக்கும் தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்குவது என்பது புரிதல் இல்லாத செயல் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.