சென்னை: உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அதிமுக வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது.
கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரின் ஆதரவாளர்கள் அதிகமான இடங்களில் வெற்றிபெற வேண்டும் எனும் முனைப்போடு களப்பணியாற்றத் தொடங்கி உள்ளனர்.
அதிமுகவில் பல்வேறு அமைப்புகளுக்கான தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
முதற்கட்டமாக, அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் அரசுப் போக்குவரத்து கழக மண்டலங்கள், பணிமனைகளின் நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கட்சித் தலைமை வெளியிட்டதை அடுத்து, கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தல் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து கட்சியின் பல்வேறு அமைப்புகளுக்கான தேர்தல்கள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன. இவற்றின் மூலம் கட்சிப் பொறுப்புகளைக் கைப்பற்றுவதில் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
அதேசமயம் எந்தவொரு காரணத்தை முன்னிட்டும் எதிர்த்தரப்பினருடன் மோதலில் ஈடுபடுவது, பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என கட்சித் தலைமை அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இருதரப்பையும் சேர்ந்த மாவட்ட செயலாளர்களும் நிர்வாகிகளும் உட்கட்சித் தேர்தலில் தங்களது ஆதரவாளர்களைக் களமிறக்கி வருகின்றனர்.

