செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
dbd52d3e-e781-4e53-ac57-619587fd2739
-

கேல் ரத்னா விருது பெயர்

மாற்றம்; கண்டனம்

நெல்லை: கன்னியாகுமரி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜய் வசந்த், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு வேண்டுமென்றே இதுபோன்று செய்வதைப்போல இருக்கிறது," என்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசியபோது விஜய் வசந்த் கூறியுள்ளார்.

நடிகை மீது வழக்குப் பதிவு

மதுரை: நடிகை மீரா மிதுன் (படம்) டுவிட்டரில் ஒரு சமூகத்தினர் குறித்து வெளியிட்ட காெணாளியால் போலிசார் அவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மீரா மிதுன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள காணொளியில், "திரைப்படத்துறையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மலிவான விசயங்களைச் செய்கிறார்கள். அவர்களை திரைப்படத்துறையில் இருந்து வெளியேற்ற வேண்டிய நேரம் இது," என்று பேசியிருந்தார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இந்த நிலையில் மதுரை மாநகரக் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் தமிழகத்தைச் சேர்ந்த சில அமைப்புகள் புகார் அளித்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் 'சைபர் கிரைம்' போலிசார், வன்கொடுமை தடுப்புச்சட்டம், அவதூறாக பேசுவது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மீரா மிதுன் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.

10ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று நேற்று அவர் தெரிவித்தார்.